மறைந்த போப் பிரான்சிஸ் தனது வாழ்நாளில் மூன்று முறை சாத்தானை நேரில் பார்த்ததாகவும், நரகத்தின் வாசல்களைக் கண்டதாகவும் தனது தனிப்பட்ட டைரியில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவல்கள் அவர் எழுதிய டைரியில் இருந்து தற்போது வெளியாகியுள்ளன.
‘தி பிரைவேட் டைரி ஆஃப் போப் பிரான்சிஸ்’ என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள இந்த டைரியில், 1992 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான அவரது அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, 2021-ம் ஆண்டு பதிவில், தனது வாழ்நாளில் மூன்று முறை சாத்தானை பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை காரில் பயணித்தபோதும், மற்றொரு முறை தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றபோது பாடகர் குழு இருக்கும் இடத்திலும், மூன்றாவது முறை வாடிகன் அதிகாரிகளுடனான சந்திப்பின்போதும் சாத்தானைக் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சந்திப்பின்போது சாத்தானின் குரல் மிகவும் கரகரப்பாக இருந்ததை தன்னால் மறக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2018-ம் ஆண்டு சிலி நாட்டுக்குச் சென்றபோது ஏற்பட்ட சர்ச்சை குறித்தும் தனது வருத்தத்தை டைரியில் பதிவு செய்துள்ளார். அப்போது, பாதிரியார் ஒருவர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாரை மறைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பிஷப்புக்கு போப் பிரான்சிஸ் ஆதரவளித்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
பின்னர் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்ட அவர், சிலி நாட்டின் பிஷப்புகளை ரோம் நகருக்கு அழைத்து விளக்கம் கேட்டார். அப்போது அவர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தனர்.
இதுகுறித்து 2021-ம் ஆண்டு டைரியில், சிலி நாட்டில் நடந்த சம்பவங்களால் தான் மிகவும் வேதனையடைந்ததாகவும், அந்த விவகாரம் இவ்வளவு தீவிரமானது என்பதை முதலில் உணரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பியூனஸ் அயர்ஸ் நகரின் பேராயராக இருந்தபோது, கார்மலைட் தேவாலயத்தில் சாத்தானைக் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்போது சாத்தானின் கண்கள் நெருப்பைப் போல எரிந்ததாகவும், முந்தைய சந்திப்பைவிட அதன் பார்வை அச்சுறுத்தும் வகையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2018-ம் ஆண்டு ஜூன் மாதம் இரவு தூங்கச் செல்வதற்குத் தயாரானபோது நரகத்தின் வாசல்களைக் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதைப் பார்த்து அச்சமடைந்த தான், ஜெபமாலையை ஆயுதமாக எடுத்துக்கொண்டதாகவும், நரகத்தின் வாசல்களுக்கு அருகில் சென்றால் தீப்பிழம்புகள் வெளியேறி நம்மைச் சுட்டுவிடும் என்றும் டைரியில் எழுதியுள்ளார்.
தனது வாழ்நாளில் ஏற்பட்ட இந்தச் சந்திப்புகளிலிருந்து இறைவன் தன்னை விடுவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த டைரியை, போப் பிரான்சிஸின் நண்பரும் வாடிகனின் கோட்பாட்டுக் கொள்கைக்கான துறையின் தலைவருமான கார்டினல் விக்டர் பெர்னாண்டஸ் தொகுத்துள்ளார். 1960-களுக்குப் பிறகு பொதுமக்களின் பார்வைக்கு வெளியாகும் ஒரு போப்பின் முதல் தனிப்பட்ட டைரி இதுவாகும்.
கடந்த 2013-ம் ஆண்டு போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரான்சிஸ், 12 ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகப் பணியாற்றினார். 88 வயதில், 2025 ஏப்ரல் மாதம் அவர் காலமானார்.