அமெரிக்காவில் H-1B விசா மற்றும் கிரீன் கார்டு வைத்துள்ள சில ஊழியர்கள், 3 வாரங்களுக்குள் வேறு நாட்டுக்கு பணியிட மாற்றம் பெற வேண்டும் அல்லது வேலையை விட்டு வெளியேற வேண்டும் என ஐபிஎம் (IBM) நிறுவனம் அறிவித்துள்ளது.
பணியிட மாற்றத்தை ஏற்காதவர்களுக்கு 3 மாத சம்பளத்தை இழப்பீடாக வழங்கவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வேலையை விட்டு வெளியேறுபவர்களுக்கு 2026 டிசம்பர் 31 கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விசா ஸ்பான்சர்ஷிப் நிறுத்தம்!
ஐபிஎம் நிறுவனத்தின் ஆலோசனைப் பிரிவில் (IBM Consulting) பெரும்பாலான பணிகளுக்கு இனி அமெரிக்க விசா மற்றும் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நவம்பர் 10ஆம் தேதி ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டிருந்தது. திறமையான பணியாளர்களுக்கான அமெரிக்க விசா திட்டங்களில் நிறுவனத்தின் பங்களிப்பு பல ஆண்டுகளாகக் குறைந்து வருவதாக ஐபிஎம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஐபிஎம் நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தாது. ஆலோசனைப் பிரிவில் உள்ள பெரும்பாலான பணிகளுக்கு மட்டுமே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வர வாய்ப்பு!
அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் பணியிட மாற்றம் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நவம்பர் 19ஆம் தேதி நிலவரப்படி, அமெரிக்காவுக்கு வெளியே ஐபிஎம் ஆலோசனைப் பிரிவில் 1,278 வேலைவாய்ப்புகள் இருந்ததாக ‘ரெஸ்ட் ஆஃப் வேர்ல்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியாவில் மட்டும் 1,125 பணியிடங்களும், சிங்கப்பூரில் 23 பணியிடங்களும், பிரிட்டனில் 18 பணியிடங்களும் உள்ளன. அமெரிக்காவில் 89 காலிப்பணியிடங்கள் இருந்தன.
உலகம் முழுவதும் ஐபிஎம் ஆலோசனைப் பிரிவில் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.
எத்தனை ஊழியர்கள் இந்த முடிவால் பாதிக்கப்படுவார்கள் என்ற விவரத்தை நிறுவனம் வெளியிடவில்லை. பணியிட மாற்றத்தை ஏற்காதவர்களுக்கு 3 மாத சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.